புதன், 12 மே, 2010

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா! -பேரா. இரா.மதிவாணன்-4

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!

பேரா. இரா.மதிவாணன்-௪

வடநாட்டுப் பாலி, பிராகிருத மொழிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வடதமிழ் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டன. வடமொழியின் தாக்கத்தால் வடநாட்டுத் தமிழ் பாலி பிராகிருத மொழிகளாகத் திரிந்துவிட்டன.
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் முதலெழுத்துக்கள் 30 என வரையறுக்கப்பட்டன. அதில் எக்காலத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. தமிழைப் போன்ற 30 அடிப்படை எழுத்துக்களைக் கொண்டிருந்த பிராகிருத, பழைய பாலி, திபத்து மொழிகளில் பிறமொழித் தாக்குதல் ஏற்பட்ட பின்பு சமற்கிருதத்துக்குரிய சிறப்பு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் பாலி மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 41ஆக உயர்ந்தது. பின்னர் பாணினியின் இலக்கண நூலுக்கு மூலமாக விளங்கிய சிவசூத்திரத்தில் சமற்கிருத எழுத்துக்கள் 42 என விரிவுபடுத்தப்பட்டன. இவற்றோடும் வேறு 9 எழுத்துக்களைப் பாணினி வகுத்துக் கொடுத்தார். காலந்தோறும் எழுத்துக்களின் எண்ணிக்கை மாறிவந்த வடமொழியின் எழுத்துத் தோற்றம் காலத்தால் பிந்தையது என நன்கு தெரிகிறது. அடிப்படை எழுத்து 30 என்பதில் எத்தகைய மாற்றமும் கொள்ளாத தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் காலத்தால் மிகவும் முந்தையது என்பதும் ஒப்பிட்டுப் பார்க்காமல் முரட்டு வலக்காரத்தோடு (பிடிவாத்தோடு) ஆய்வு செய்பவர்களுக்கு எல்லாம் வடக்கிலிருந்து வந்தன என்னும் பொய்த் தோற்றம்தான் தெரியும்.
அசோகர் காலப் பிராமி எழுத்துதான் இந்தியாவில் பழையது என்றால் அந்த எழுத்து எப்படித் தோன்றியது அதில் உள்ள பழைய இலக்கியங்கள் எங்கே என்பதற்கு ஐராவதம் மகாதேவனாரிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை.
சரியா அணுகுமுறை
எகுபதிய ஓவிய எழுத்துக்கள் சுமேரிய ஆப்பு எழுத்துக்கள், சீன ஓவிய எழுத்துக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வெற்றி கண்டவர்கள் பின்பற்றிய அணுகுமுறைகள் எவற்றையும் அசுகோ பர்போலாவும், ஐராவத மகாதேவனாரும் பின்பற்றவில்லை. அதனால்தான் சிந்துவெளி முத்திரைகளில் ஒன்றைக்கூட இவர்களால் செப்பமாகப் படிக்க முடியவில்லை.
மேற்கண்ட எழுத்துக்களை ஆய்ந்தோர் ஒரே எழுத்தொலிப்புக்குச் சமகாலத்தில் இடவேறுபாடுகளாக வழங்கிய வரிவடிவ வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டினர். எகுபதிய மொழியில் க(k) என்பதற்கு 16 வகை வரிவடிவ வேறுபாட்டு எழுத்துக்கள் உள்ளன. எகுபதிய மொழியிலுள்ள 24 அடிப்படை ஒலிப்பெழுத்துக்கு 130 வரிவடிவங்கள் உள்ளன. எந்தெந்த எழுத்துக்கு இடவேறு பாடாக எத்தனை வரிவடிங்கள் உள்ளன என அவர்கள் மேற்கண்ட மொழிகளில் பட்டியலிட்டனர். 38 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்துவெளி எழுத்தில் ஆய்வு செய்யும் ஐராவதம் மகாதேவனார். அசுகோ பர்போலா போன்றோர் இம்முயற்சியில் ஈடுபடவே இல்லை. வேறு யாரேனும் சிந்துவெளி எழுத்தில் இத்தகைய வேறுபாடுகளை (Homophonic) வகைப்படுத்திக் காட்டினாலும் அதை எடுத்துக் காட்ட வில்லை.
மேற்கண்டவாறு சுமேரிய எகுபதிய மொழிகளை ஆய்வு செய்தோர் குறிப்பிட்ட எழுத்தின் வடிவம் காலந்தோறும் எப்படி மாறி வந்திருக்கிறது என்று காலமுறை வரிவடிவத் திரிபுகளைப் (Chronilogical and regional Classification of the Script forms) பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர். இப்பணியையும் சிந்துவெளி எழுத்தாய்வில் எவரும் மேற்கொள்ளவில்லை. உலகம் ஒரு போக்கில் போனால் ஐராவதம் மகாதேவனார் போன்றோர் வேறொரு போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
சிறந்த ஆய்வாளர் என்றால் எந்தச் சிக்கலையம் விடுவித்துப் படிக்க முடியாத முத்திரை எழுத்துக்களையும் படித்துக்காட்டவேண்டும். அதை விடுத்து இதுவும் சரியில்லை அதுவும் சரியில்லை என்று கூறிவிட்டு அதற்கான அரைகுறைக் காரணங்களைக் காட்டுவதன் வாயிலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டதாகக் கருத முடியாது. ஒரு குற்றத்திற்கான வழக்கில் யார் குற்றவாளி என்னும் உண்மையைக் கண்டறியாமல் முறைமன்ற நடுவர் இரு சாராரிடத்திலும் குற்றம் உள்ளது என வழக்கைத் தள்ளுபடி செய்தால் அதைத் தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியாது.


நடுநிலை
சிந்துவெளி எழுத்தைப் படித்துக் காட்டும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியர்களின் அணுகுமுறைகளை அலசி இவை ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறும் ஐராவதம் மகாதேவனார் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படித்துக் காட்டிய அணுகு முறைகளைப் பற்றிக் குறை கூறாதது ஏன்?
சமற்கிருதம் பற்றிய அறிவு மேனாட்டாருக்கு மிகுதி, அசுகோ பர்போலா தமிழ் படிக்காதவர். எதையும் வடடொழி வழிவந்த தொன்மக் (புராண) கதைகளோடு இணைத்துக் காண்பார். சிந்துவெளி முத்திரைகளை வெளியிட்டவர்கள் வணிகர்கள். வணிகர்களுக்கும் தொன்மக் (புராண) கதைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது அசுகோ பார்போலாவுக்குத் தெரிவில்லை.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக