திங்கள், 10 மே, 2010

பேரா. இரா.மதிவாணன் தொடர்ச்சி ...பகுதி-3

பேரா. இரா.மதிவாணன் தொடர்ச்சி ...பகுதி-௩

தமிழ்ச்சொல் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பதால் நான் சிந்துவெளி எழுத்தைப் படித்தமுறை சரியானதுதான் எனத் தெரிந்துகொண்டேன்.
தொல்காப்பிய இலக்கணக் கட்டமைப்புகள் சிந்துவெளி முத்திரைகளிலும் தென்படுவதோடு தமிழிக் கல்வெட்டுக்களிலும் ஒரு சீராக அமைந்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். நான் கூறிய தொல்காப்பிய மேற்கோள்களை அவர் நம்பவில்லை. ஆனால் அவருடைய முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் (Early Tamil Epigraphy) எனும் நூலில் தொல்காப்பிய இலக்கணக் கட்டமைப்புக்களைப் பொருத்திக் காட்டுகிறார்.
உடும்புப்பிடி
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அசோகரின் பிராமி எழுத்தை மட்டும் அறிந்திருந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் கி.பி. 1906 அளவில் பாளையங்கோட்டைக்கு அருகில் மருகால்தலை என்னுமிடத்தில் கண்ட பிராமி அல்லாத எழுத்துக்கள் கொண்ட தமிழிக் கல்வெட்டைக் கண்டு மருண்டனர். அதனைப் பாலி பிராகிருதம் போலவே படிக்க முயன்றனர். இவற்றை முதன்முதலில் பார்த்த எச்.கிருட்டின சாத்திரியாரும் கே.வி.சுப்ரமணிய அய்யரும் தென்னாட்டுக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் புலப்படுத்தினாலும் வடநாட்டுப் பிராமியின் திரிபாகவே கருதினர். இந்தக் கல்வெட்டு மூதாதைகளின் கொள்கைகளில் சொக்கிப் போன ஐராவதம் மகாதேவனார் தமிழிலுள்ள எழுத்துக்கள் வடக்கிலிருந்தே வந்தவை என்னும் மயக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை.
தென்னாட்டுத் தமிழிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த நாராயணராவ் இவை பிராகிருத மொழியைச் சார்ந்த பைசாச மொழிக் கல்வெட்டுக்கள் என்றார். பாண்டிய நாட்டுத் தமிழையும் பைசாச பிராகிருத மொழி என்று வடமொழியாளர் குறிப்பிடுவது வழக்கம். இவர் பிராகிருதபாலி மொழிச் சொற்களையும் சமற்கிருதமாகக் கருதினார்.

வடநாட்டுப் பிராகிருதம் மற்றும் சமற்கிருதத்தின் வளர்ச்சியால்தான் சமண முனிவர் காலத்தில் தமிழுக்கு எழுத்து தோன்றியது என்னும் தலைகீழ் நம்பிக்கையும் இவரை ஆட்கொண்டது. அதனால் இவர் தமிழ்ச் சொற்களை வடசொற்களாகக் காட்டியுள்ளார். பளித வாணிகர் நெடுமூலன் என மயிலை சீனி. வேங்கடசாமி தெளிவாகப் படித்துக் காட்டியுங் கூட பணித வாணிகன் நெடுமலன் என ஜராவதம் மகாதேவன் படித்துக் காட்டினார். பளிதம் என்பது வெற்றிலைப் பாக்குடன் சேர்த்துக் கொள்ளும் ஒருவகை கருப்பூரம், ஆனால் இதனை வெல்லப் பாகினைக் குறிக்கும் பணித எனும் சமற்கிருதச் சொல்லாகக் காட்டியுள்ளார். நெடுமல்லன் என்னும் சொல் நெடுமலன் எனக் குறுகியிருப்பதாகக் கூறுகிறார். வெல்லம் – வெலம் என்றும், கொல்லை – கொலை என்றும் திரிவது எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலை சீனி. வேங்கடசாமி, நடன காசிநாதன் போன்றோர் செப்பமாகப் படித்துக் காட்டிய சொல் வடிவங்களை இவர் எடுத்துக்காட்டவும் இல்லை. தன் பிழை பாடான சொல்லாட்சிகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் முன்வரவில்லை.
தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை எல்லாம் மூத்த தமிழறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.


பிராமிக் கல்வெட்டுப் பதிப்பு
சிந்துவெளி எழுத்துச் சான்றுகளை அடைவுபடுத்தி வெளியிட்டதோடு தன் சிந்துவெளி ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட பின்னர், ஒரே ஒரு முத்திரையைக்கூட இவர் நல்ல தமிழ்ச் சொல்லாகப் படித்துக் காட்டவில்லை. அடுத்ததாக இவர் மேற் கொண்ட பணி தென்னாட்டுப் பிராமியாகிய தமிழிக் கல்வெட்டுக்களை அடைவுப்படுத்தி Early Tamil Epigraphy என்னும் பெயரில் வெளியிட்டதாகும்.

இந்தத் தலைப்பே சிறிதும் பொருத்தமில்லாதது
1. தென்னிந்தியாவில் பல இடங்களில் சிந்துவெளி எழுத்துச் சான்றுகள் பாறை ஓவியங்களிலும், பானை ஓடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றை Early Tamil Epigraphy எனச் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து வடநாட்டுப் பிராமி எழுத்திலும் தமிழி (தென்னாட்டுப் பிராமி) எழுத்திலும் காணப்படும் சமண முனிவர்களின் கொடுங்கலப்பு கொச்சைத் தமிழ் இழி நடை வழக்குகள் மலிந்த குகைக் கல்வெட்டுக்களைத் தமிழ்க் கல்வெட்டு என்பது ஏற்கத்தக்கதன்று.
2. ஆதலால் இந்தக் கல்வெட்டு அடைவு நூலுக்கு Jain Tamil Dialect Epigraphy என்று பெயரிட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதல் புகுந்த முகமதியர் தமிழ்ச் சொற்களை ஒலிக்கத் தெரியாமல் நம்பள்கி சேலம் மேலே போறான். நிம்பள்கி திருச்சி மேலே எப்போ வர்ரான் எனப் பேசும் மொழியறியாதவர்களின் கடுங்கொச்சை வட்டாரச் சொல்லாட்சிகளில் தொல்காப்பிய இலக்கணத்தைப் பொருத்திப் பார்க்க முடியுமா?
3. மணிய் (மணி), பளிய் (பள்ளி), வழுத்தி (வழுதி), ஆந்தய் (ஆந்தை), மத்திரை (மதுரை), காவிதிஇய் (காவிதி), கொட்டுபிதோன் (குகையில் படுக்கை குடைவித்தவன்) போன்ற கொச்சைச் சொற்களைத் தமிழர்களால் பேசப்பட்ட தமிழ்ச் சொற்களாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தத் தமிழானாலும் இந்த அளவுக்குக் கொச்சையான கொடுஞ் சொற்களைப் பேசமுடியாது. மொழி அறியாதவர்களின் உளறல்களைத் தமிழ்க் கல்வெட்டு என்று பெயரிட்டு அழைப்பது பொருந்தாது.

வடதமிழ்
அசோகர் கல்வெட்டுகளில் உள்ள பிராமி எழுத்துக்களை இந்தியாவிலுள்ள முதன்மை எழுத்துக்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அசோகர் காலத்திற்கும் முற்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகள் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடநாட்டுப் பிராமி எழுத்துக்கள் வணிகர்களாலும், அரசர்களாலும் பயன்படுத்தப்பட்டவை. ஆனால் தென்னாட்டுத் தமிழி பொது மக்களால் ஆளப்பட்ட எழுத்து என்பது நிறுவப்பட்டுள்ளது. ஆதலால் வடநாட்டுப் பிராமியை விடத் தென்னாட்டுத் தென்பிராமி எனும் தமிழி காலத்தால் முற்பட்டது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்றவர் விளங்கிக் கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக