வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பேரா. இரா.மதிவாணன் தொடர்ச்சி ..

பகுதி -௨
பழந்தமிழரின் எண்களை வணிகர் வாயிலாக பொனீசியர் காலம் (கி.மு.1200) முதலாக மேற்காசிய வணிகர் அனைவரும் பின்பற்றினர். அதனால்தான் அரபி போன்ற மொழிகளில் 125 எனும் எண் 521 என வலமிருந்து இடமாக எழுதப்படாமல் நம்மைப் போன்றே 125 என எழுதப்படுகின்றன என்னும் உண்மையை ஐராவதம் மகாதேவன் போன்றோர் எண்ணிபார்க்க வேண்டும். மொழியளவில் வலமிருந்து எழுதுவோர் இடமிருந்து எழுதுவதாக மாற்றிக் கொண்ட வரலாறு உலகில் இல்லை. இது இந்தியாவில் மட்டும் நடந்ததா?
இந்திய எண்கள் என்னும் பழந்தமிழ் எண்கள் காலப்போக்கில் வரிவடிவத் திரிபுகளாகக் கிடைத்த போதிலும் இன்று உலகம் முழுவதும் ஆளப்படும் 1, 2, 3 போன்ற எண்கள் குறிப்பாகத் தமிழர் உலகத்திற்கு நல்கிய நாகரிகக் கொடையாக விளங்கி வருகின்றன.
எண்களை இடமிருந்து வலமாக எழுதிய பழந்தமிழ் மக்களும் சிந்துவெளி மக்களும் மொழியை மட்டும் வலமிருந்து எழுதியிருக்க முடியாது. சிந்துவெளி எழுத்துக்களின் எண்களே தமிழி (தென்பிராமி) கல்வெட்டுக்களில் எண்களாக ஆளப்பட்டிருப்பதால் சிந்துவெளி மொழி வலமிருந்து இடமாக எழுதப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
நம்பத் தகுந்த சான்றை நம்பாதது
சிந்துவெளி முத்திரை எழுத்துக்களைப் படிப்பதற்கு இருமொழி முத்திரை கிடைத்தால்தான் நம்பகமான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியும். எகுபது மொழியின் ஈரோகிளிபிக் எழுத்து படிப்பதற்கு மும்மொழி எழுத்துச் சான்று கிடைத்ததால் முத்திரை எழுத்துக்களுக்குரிய சரியான ஒலிப்பை சம்போலியன் என்பவர் உறுதிப்படுத்தினார். எகுபது, ஈரோகிளிபிக் எழுத்துச் சான்றுகள் முழுமையாகப் படிக்கப்பட்டன. அவ்வாறே சிந்துவெளி எழுத்துக்குத்தக்க சான்று கிடைக்கவில்லை என்று படிக்க முடியாததற்குக் காரணம் காட்டி வந்தனர்.

யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இந்திரபாலா ஆனைக்கோட்டை எனுமிடத்தில் கண்டெடுத்த வெண்கல முத்திரை ஈரெழுத்து முத்திரை என உறுதி செய்யப்பட்டது. அதில் மேலே மூன்றெழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களாகவும் கீழேயுள்ள மூன்றெழுத்துக்கள் தென்பிராமி எழுத்துக்களாகவும் இருந்தன. இது ஈரெழுத்துக்கள் தென்பிராமி எழுத்துக்களாகவும் இருந்தன. இது ஈரெழுத்துச் சிந்துவெளி எழுத்துச் சான்று என இந்திரபாலா கூறினார். இந்த இரு எழுத்து வடிவங்களில் தீவுகோ என்னும் சொல் எழுதப்பட்டிருப்பதை நானும் படித்துக் காட்டினேன்.
ஆயின் திசை திருப்பும் முயற்சியில் ஐராவதம் மகாதேவன் முற்பட்டுள்ளார். மேலே இருப்பது சிந்துவெளி எழுத்து போன்ற எழுத்து. இது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது எனத் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகிறார். இவர் எழுதும் ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலம் போன்ற எழுத்துக்கள் என்றும் இவர் பேசுகின்ற ஆங்கிலம், ஆங்கிலம் போன்ற ஆங்கிலம் என்றும் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்பத் தகுந்தவற்றை நம்ப மறுக்கிறார் என்பதற்கு மற்றொரு சான்றும் காட்டலாம்.
பீகார் மாநிலத்துப் பாகல்பூரில் துணை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு. வர்மா என்பவர், நான் சந்தால் பழங்குடி மக்களைக் காண விரும்பியதால் அழைத்துச் சென்றார். நான் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்பவன் என்பது அவருக்கும் தெரியும்.
சந்தால் பழங்குடி மக்களின் தலைவர் திசோம் நாய்கி விழா நாளில் அதுவும் முழுமதி நாளன்று வீட்டின் சுவரில் சிந்துவெளி எழுத்துக்களை எழுதுகின்றார். அவர் சிந்துவெளி எழுத்தில் எழுதிய ஒன்பது சொற்களைப் படம் பிடித்து அவற்றை என் நூலில் வெளியிட்டுள்ளேன். தம் முன்னோர்
எழுதிய எழுத்துக் குறியீடுகளைத் தாமும் எழுதுவதாக திசோம் நாயகி கூறினார். அவருக்கு அந்த எழுத்துக்களைப் படிக்கத் தெரியவில்லை. அந்த எழுத்துக் கோர்வை கொண்ட சொல்லாட்சிகள் அசுகோ பர்போலா வெளியிட்ட எந்தச் சிந்துவெளி எழுத்து அடங்கலிலும் இல்லை.
இவை அரப்பா மொகஞ்சதாரோவில் காணப்பெற்ற சிந்துவெளி எழுத்துக்கள் என்று நான் சொன்னபோது திசோம் நாய்கி அதை மறுத்தார். எங்களைத் தவிர இப்படி எழுதுபவர்கள் வேறொருவர் இருக்க முடியாது என்றார். சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை திசோம் நாய்கிக்கு எடுத்துச் சொல்லி அங்குள்ள எழுத்துக்களைப் படிக்கத் தெரிந்தவர் ஒருவர் சந்திக்க இருக்கிறார் எனத் திசோம் நாய்கி அவர்களுக்கு முன்னரே திரு. சர்மா சொல்லி வைத்திருந்ததால் என்னைச் சந்தால் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றித்தான் திரு. வர்மா அவர்களிடம் சொல்லியிருக்கிறார். இதைத் தலைகீழாகப் புரிந்து கொண்ட ஐராவதம் மகாதேவனார், திரு.வர்மா முன்கூட்டியே சிந்துவெளி எழுத்துக்களை திசோம் நாய்கிக்குச் சொல்லி வரைந்து காட்டிப் பிறகு என்னை அழைத்து என்னிடம் காட்டுவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என உண்மையைத் திரித்துக் கூறுகிறார்.
தன்னாலும் சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தெளிவாகப் படித்துக் காட்டுபவரையும் நம்பாத மனப்பாங்கு கொண்டவர்கள் இருப்பது இயல்பே. இதனை வருத்தம் தருவதாகக் கருதவியலாது.
இந்தியாவில் மட்பாண்டம் செய்வோர் குறியீடுகள் சலவைத் தொழிலாளிகள் போடும் அடையாளக் குறியீடுகள் அனைத்தும் சிந்துவெளி எழுத்தாகவே இருப்பதை என் களப்பணி ஆய்வுகள் வாயிலாகச் சுட்டிக் காட்டினேன். சிந்துவெளி எழுத்துக்கள் இந்தியா முழுவதும் தமிழர்கள் வழங்கும் இந்தியப் பொது எழுத்துக்களாக இருந்தன என்று கூறினேன். இது உண்மையா என்று ஆராய்வதற்காகக் களப்பணி முயற்சி மேற்கொள்ள ஐராவதம் மகாதேவனார் முன்வந்திருக்கலாம்.

சிந்துவெளி முத்திரையில் அவ்வன் என்னும் பெயரைப் படித்துக் காட்டினேன். புலிமான் கோம்பையில் உள்ள நடுகல்லில் தமிழி (தென்பிராமி)க் கல்வெட்டில் அவ்வன்பதவன் எனும் பெயரைப் பேராசிரியர் இராசன் படித்துக் காட்டியிருக்கிறார். நான் சிந்துவெளி முத்திரைகளில் படித்த அவ்வன் தமிழ்ச்சொல் தமிழ் நாட்டிலும்
-தொடரும்…

சனி, 24 ஏப்ரல், 2010

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!
பேராசிரியர் இரா. மதிவாணன்
சிந்துவெளி முத்திரைகள் முதலாக, பிரகிருதக் கல்வெட்டுக்கள், வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் வரை உலகறிந்த ஆராய்ச்சியாளராக விளங்குபவர் ஐராவதம் மகாதேவன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. மாவட்ட ஆட்சியாளராகத் தொடங்கிய அவருடைய பணி கல்வெட்டு ஆராய்ச்சியை வாழ்விலக்காகக் கொண்டது; உலகளாவிய புகழ் கொண்டது.
சிந்துவெளி முத்திரைகளிலும் எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படும் சொல்லடைவுகளை முறைப்படுத்தி வெளியிட்டதும் தென்னகப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்து முந்தைய தமிழ்க் கல்வெட்டுக்களை வெளியிட்டதும், இவருடைய முதன்மையான வெளியீடுகள், எண்ணிறந்த ஆங்கிலக் கட்டுரைகள் உலகப் புகழ் தந்தன. தமிழில் இவர் எதுவும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஆய்வுகள் தமிழுக்கு வெறும் ஊக்கம் தந்தன. ஆக்கம் எதுவும் தரவில்லை. மாறாகத் தமிழ் வரலாற்றைத் தாக்குவனவாகவும் உள்ளன என்பது வெளிப்படை.
சிந்துவெளி எழுத்தாய்வுகள்
பின்லாந்து எல்சின்கி பல்கலைக்கழகத்துச் சிந்துவெளி ஆய்வாளர் அசுகோ பர்போலாவொடு இணைந்து இவர் எடுத்த முடிவுகளின் வண்ணம் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்க்குரியது1 என்பது பாராட்டத்தக்கது. ஆனால் சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கிறது என இவர்கள் எடுத்த முடிவு2 முற்றிலும் தவறானது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்துவெளி எழுத்து படிக்கப்படாததற்கு இந்தத் தவறான முடிவே காரணமாயிற்று. உடும்புப் பிடியாக இவர்கள் கொண்ட கோட்பாடு எத்தனை நூற்றாண்டாயினும் வெற்றிபெறப் போவதில்லை. ஒருசில முத்திரைகளை யேனும் படித்துக் காட்டியவர்களால்தான் எழுதப்பட்ட முறை வலமா! இடமா! என்பதை முடிவுகட்ட முடியும். ஒரு முத்திரையைக் கூட இவர்கள் ஒழுங்காகப் படித்துக் காட்டாமல் எழுதப்பட்ட திசை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக உள்ளது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

பி.பி.இலால் என்னும் ஆய்வாளர் பானை ஓட்டிலுள்ள எழுத்தின் வீழ்கோடுகளைச் சில வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகப் படிந்துள்ளன எனக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு இவரும் இம்முடிவுக்கு வந்துள்ளார். இடதுகைப் பழக்கமுள்ளவன் கூட அப்படிக் கோடுகள் வரைந்திருக்க முடியும். இதனை ஒரு ஆணித்தரமான காரணமாகக் கொள்ள முடியாது. இது முதற்காரணமாக, சிந்துவெளி முத்திரைகளில் பெரிய எழுத்தாக எழுதத் தொடங்கி வரி இறுதியில் எழுத்து சிறுத்துப் போகிறது. எஞ்சிய எழுத்துக்களை வலப்பக்கத்து இறுதியில் கீழே எழுதியுள்ளனர். வலமிருந்து இடமாக எழுதியதால்தான் எஞ்சிய எழுத்தை வலப்பக்கத்து இறுதியில் எழுதியுள்ளனர் என்பதை இரண்டாம் காரணமாகக் காட்டியுள்ளனர். எழுத்துக்களை முத்திரைக் கல்லில் பொறிப்பவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு நிரம்பாத தொழிலாளர்களாக இருப்பது இயல்பு. ஆதலால் எஞ்சிய எழுத்தை எங்கே பொறித்துள்ளனர் என்பதைக் காரணமாகக் காட்ட முடியாது.
வட்டமாகப் பொறித்த முத்திரைகளில் சிறிய முத்திரை எழுத்துக்களில் தொடங்கிப் பெரிய எழுத்துக்களில் முடிந்த பாங்கு வல இடமாக உள்ளது என்னும் மூன்றாம் காரணமும் ஏற்கத் தக்கதன்று. பெரும்பாலான முத்திரைகளில் எழுத்துக்கள் சம உயரமுடையனவாக உள்ளன. எழுத்து பெருத்தும் சிறுத்தும் போவது எழுதுபவரின் கைப்பாங்கு. ஆதலால் இந்தக் காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.
ஆணித்தரமான சான்று
சிந்துவெளி முத்திரை எழுத்து இடமிருந்து வலமாக எழுதப்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 5000 எழுத்துச் சான்றுகளைத் தமிழாகப் படித்துக் காட்டியுள்ளேன்,3 ஒரு மொழியில் எழுத்துக்களைத் திசை மாற்றி எவராலும் படிக்க முடியாது. சிந்துவெளி எண்களும் 115, 183, 2400 போன்று இடமிருந்து எண்மானமாக எழுதப் பெற்றுள்ளன. பெரிய எண்ணை முதலில் சொல்லி அடுத்த எண்ணை வரிசைப்படுத்திச் சிந்துவெளி நாகரிகக் காலத்திய இடமிருந்து வலமாக எழுதும் எண்ணுமுறை தமிழ்க் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு வாயிலாக நான் நிறுவியுள்ளேன். மயிலை சீனி. வேங்கடசாமியும் இவை எண் குறித்த குறியீடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
௫ அராபிய எண்கள் எனக் கருதப்பட்ட இன்றைய எண்கள் இந்திய எண்களே என அராபிய ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய எண்கள் எனக் குறிக்கப் பட்டுள்ள சிந்துவெளி நாகரிகக் காலத்திய வரிவடிவங்கள் திரிபுற்ற தமிழ் எண்களே என நான் நிறுவிக் காட்டியுள்ளேன்.
அரபி, உருது, பாரசீக மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும் வடசெமித்திக் எழுத்து மரபைச் சார்ந்தவை. இம்மொழியில் எண்களுக்குரிய குறியீடுகளை முறைப்படி அவர்கள் வலமிருந்து இடமாகத்தான் எழுத வேண்டும். ஆனால் எல்லோரும் வியக்கும் வகையில் எண்களை மட்டும் இந்திய மொழிகளைப் போல் இடமிருந்து வலமாக எழுதுகின்றனர். இதன் காரணம் என்ன?­­­­
.....தொடரும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

குட்டி ரேவதி அவர்களுக்கு

கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு,
வணக்கம். முத்துக்குமார் எழுதுவது.
இன்றுதான் உங்கள் வலைதளத்தைக் கண்டேன். http://www.kuttyrevathy.blogspot.com/
ஒரு நிகழ்வில் ஏற்ப்படும் உணர்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இனி தொடர்ந்து உங்கள் வலைதளத்தைப் படிக்கிறேன்..
எழுதுகிறேன்.. கவிஞர் தமிழ் நதியின் உங்களுடனான நேர்காணல் வாசித்தேன்.
என்றும் அன்புடன்,
கு.முத்துக்குமார்