புதன், 15 செப்டம்பர், 2010

ஞாயிறு

ஞாயிறு

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம்,

நீ காட்சி, மின்னல், இரத்தினம் ,

கனல்,தீக்கொழுந்து,

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி.

கண் நினது வீடு,

புகழ், வீரம்-இவை நினது லீலை.

மழையும் நின் மகள்,

மண்ணும் நின் மகள்,

காற்றும் கடலும்

கனலும் நின் மக்கள்.

வெளி நின் காதலி

இடியும் மின்னலும்

நினது வேடிக்கை.

-மகாகவி சுப்ரமணிய பாரதி

சனி, 22 மே, 2010

வணக்கம்

புதன், 19 மே, 2010

கள்ளிப்பட்டி - ஈரோடு மாவட்டம்


என் ஊர்

வானளாவிய மலைகள்
விடுதலையாய் யானைகள்
கூட்டம் கூட்டமாய் மான்கள்

அடர்ந்த காடுகள்
சிறகு விரிக்கும் மயில்கள்
ஓடி விளையாடும் முயல்கள்

வேளாண் தோட்டங்கள்
ஓயாமல் உழைக்கும் மனிதர்கள்
பலன் பார்க்கா கால்நடைகள் ..

நெருங்கிய வீடுகள்
வயல்களையே நம்பும் மக்கள்

வளைந்து நெளிந்த பாயும் வாய்க்கால்கள்
உற்சாக எதிர் நீச்சல் மீன் குஞ்சுகள்
சுகமான குளியலில் எருமைகள்

பச்சை போர்த்திய வயல் வெளிகள்
நெற்பயிரிநூடே ஊர்ந்து விளையாடும் நண்டுகள்
வரும்வரை காத்திருக்கும் செங்கால் நாரைகள்

சல சலத்து ஓடும் வாணி நதி
பிரிந்து பின் சேரும் இடை மணல் வெளி

தமிழர்களின் நிலப்பிரிவு
குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் பாலை அனைத்தும் ஒருங்கே ...

இவையனைத்தும் எனதல்ல எனினும்
இவையின்றி நானில்லை...

ஞாயிறு, 16 மே, 2010

இரவு

இரவு
நாம் உறங்காத இரவே
உலகை உணர்த்தும் பகல்
உண்மை உலகின் வெளி
பகலின் வெளிச்சம் இருள்
பொய்யான ஆரவாரங்கள் ஆர்பாட்டங்கள்
போலியான் நாடகங்கள் முகமூடிகள்
உள்ளத்தின் உண்மைகள் கனவுகளாய்

அத்து மீறிய எண்ணங்கள் நினைவுகளாய்
எவ்வளவைச் செரிக்கும் இந்த இரவு ...
சூரியனை அறிமுகபடுத்திய இந்த இரவு

சூரியனால் அறிய முடியுமா?

உலகமே உறங்கும் பொது

விழித்திருக்கும் இரவு

இனிய இரவு


இரவு

நாம் உறங்காத இரவே

உலகை உணர்த்தும் பகல்

உண்மை உலகின் வெளி

பகலின் வெளிச்சம் இருள்

பொய்யான ஆரவாரங்கள் ஆர்பாட்டங்கள்

போலியான் நாடகங்கள் முகமூடிகள்

உள்ளத்தின் உண்மைகள் கனவுகளாய்
அத்து மீறிய எண்ணங்கள் நினைவுகளாய்

எவ்வளவைச் செரிக்கும் இந்த இரவு ...

சூரியனை அறிமுகபடுத்திய இந்த இரவு
சூரியனால் அறிய முடியுமா?

உலகமே உறங்கும்போது
விழித்திருக்கும் இரவு

புதன், 12 மே, 2010

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! பேரா. இரா.மதிவாணன்-5

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!
பேராசிரியர் இரா. மதிவாணன்
பகுதி ஐந்து
ஒரு மீன் சின்னத்தின் அருகில் ஆறு கோடுகள் இருந்தால் அறுமீன் – கார்த்திகை மீன் – முருகனைக் குறிப்பது என எகுபதிய பட எழுத்தைப் படிக்கின்ற பாங்கில் தன் ஆய்வை விரித்துரைக்கிறார். கடவுளுக்கு வணிக முத்திரை எதற்கு என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
மீன் வடிவத்தில் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு மைமீன் என்று அசுகோ பர்போலா படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல் என்பார்கள். அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என நிற்கும். அது மை எனத் திரிந்து கருநிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார்.
வேய்(தல்) – மேய் – ஆதி மேய் – மை ஆகுமா? கூரை வேய்தலுக்கும் கருநிறத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? தமிழ் தெரிந்தவராகவும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் உள்ள ஐராவதம் மகாதேவனார் அசுகோ பர்போலாவின் ஆராய்ச்சிக் குறைபாடுகளை முழுமையாகக் காட்டவில்லை.
ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் சிந்துவெளித் தமிழரின் உண்மை வரலாற்றைத் தெளிவாக உறுதிப் படுத்துவனவாக இல்லை என்பதே பலர் சிந்தனையிலும் நிழலாடும் கருத்தாக உள்ளது. சிந்துவெளி முத்திரையில் உள்ளவை மொழி எழுத்துக்கள் அல்ல வெறும் குறியீடுகள் என்று வெளிவந்த வெளிநாட்டுக் கட்டுரைகளை அசுகோ பர்போலாவும் ஐராவதம் மகாதேவனும் ஆணித்தரமாக மறுத்த கட்டுரைகள் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றன. ஆயினும் தமிழ் எழுத்து அசோகர் பிராமியிலிருந்து வந்தது, தமிழர்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவர்கள் சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டது போன்ற ஐராவதம் மகாதேவனாரின் கருத்துக்கள் அவருக்கும் தமிழுலகிற்கும் பெருமை சேர்ப்பனஅல்ல. தமிழுக்கு ஆக்கம் விளைப்பன அல்ல.
எனினும் சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஐராவதம் மகாதேவனாரின் உழைப்பு தந்துள்ள பயனை எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
கடந்த ஒரு நூற்றாண்டாக வடபிராமி தென்பிராமி கல்வெட்டுக்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றை அலசி ஆராய்வதற்கு ஐராவதனார் பெரிதும் பாடாற்றி ஆய்வுப் புலங்களைப் பீடு பெறச் செய்திருக்கிறார். காடு மலை ஏறிக் கால்கடுக்க நடந்து ஊன்றிப் பார்த்தும், ஒற்றியெடுத்தும் எழுத்துப் பதிவுகளைச் சரிபார்த்த பேருழைப்புக்குத் தமிழுலகம் அவருக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. அவரை எவ்வளவு போற்றினாலும் தகும். விரிவான தரவல்களை முறையாக ஆராய்ந்தாலும் முன்னைத் தமிழின் தொன்மை அளவீட்டைச் சரியாகச் செய்யவில்லை என்பதே தமிழுலகின் மனக்குறை.
கல்வெட்டு ஆய்வில் பலருக்கு ஊக்கம் பெருகப் பெரிதும் உழைத்திருக்கிறார் என்றாலும் தமிழின் உண்மை வரலாற்றுக்கு ஆக்கம் சேர்க்கவில்லை என்னும் மனக்குறை நீடிக்கத்தான் செய்கிறது.
மேற்கோள் குறிப்பு
1. I. Mahadevan, 2002, Presidential Address, IHC, Bhopal
2. Asko Purpola, Corpus of Indus Seals and Inscriptions
3. R. Madhivanan, 1995, Indus Script among Dravidian Speakers
4. மயிலை சீனிவேங்கடசாமி, 1981, சங்கக் காலப் பிராமி கல்வெட்டுகள்
5. R.Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers
6. Indrapala, Is is an Indus Script. The Hindu.
7. R. Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers
8. R. Madhivanan, 1995 Indus Script Among Dravidian Speakers
9. Rajan, 2004, Hero Stone, Puliman Kombai
10. நாராயணராவ் 1938, Brahmi Inscriptions of South India, The Men Indian Antiquary Vol.I, PP. 362 – 376
11. இரா. மதிவாணன், 2007, தமிழர் வரலாற்றில் புதிய பார்வைகள் (பக். 40- 48)
12. இரா. மதிவாணன், 2007, சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி.
13. ஐ. மகாதேவன், ஆவணம் கட்டுரை
14. ஐ.மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகள் மொழியின் எழுத்தே.
•••

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா! -பேரா. இரா.மதிவாணன்-4

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!

பேரா. இரா.மதிவாணன்-௪

வடநாட்டுப் பாலி, பிராகிருத மொழிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வடதமிழ் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டன. வடமொழியின் தாக்கத்தால் வடநாட்டுத் தமிழ் பாலி பிராகிருத மொழிகளாகத் திரிந்துவிட்டன.
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் முதலெழுத்துக்கள் 30 என வரையறுக்கப்பட்டன. அதில் எக்காலத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. தமிழைப் போன்ற 30 அடிப்படை எழுத்துக்களைக் கொண்டிருந்த பிராகிருத, பழைய பாலி, திபத்து மொழிகளில் பிறமொழித் தாக்குதல் ஏற்பட்ட பின்பு சமற்கிருதத்துக்குரிய சிறப்பு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் பாலி மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 41ஆக உயர்ந்தது. பின்னர் பாணினியின் இலக்கண நூலுக்கு மூலமாக விளங்கிய சிவசூத்திரத்தில் சமற்கிருத எழுத்துக்கள் 42 என விரிவுபடுத்தப்பட்டன. இவற்றோடும் வேறு 9 எழுத்துக்களைப் பாணினி வகுத்துக் கொடுத்தார். காலந்தோறும் எழுத்துக்களின் எண்ணிக்கை மாறிவந்த வடமொழியின் எழுத்துத் தோற்றம் காலத்தால் பிந்தையது என நன்கு தெரிகிறது. அடிப்படை எழுத்து 30 என்பதில் எத்தகைய மாற்றமும் கொள்ளாத தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் காலத்தால் மிகவும் முந்தையது என்பதும் ஒப்பிட்டுப் பார்க்காமல் முரட்டு வலக்காரத்தோடு (பிடிவாத்தோடு) ஆய்வு செய்பவர்களுக்கு எல்லாம் வடக்கிலிருந்து வந்தன என்னும் பொய்த் தோற்றம்தான் தெரியும்.
அசோகர் காலப் பிராமி எழுத்துதான் இந்தியாவில் பழையது என்றால் அந்த எழுத்து எப்படித் தோன்றியது அதில் உள்ள பழைய இலக்கியங்கள் எங்கே என்பதற்கு ஐராவதம் மகாதேவனாரிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை.
சரியா அணுகுமுறை
எகுபதிய ஓவிய எழுத்துக்கள் சுமேரிய ஆப்பு எழுத்துக்கள், சீன ஓவிய எழுத்துக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வெற்றி கண்டவர்கள் பின்பற்றிய அணுகுமுறைகள் எவற்றையும் அசுகோ பர்போலாவும், ஐராவத மகாதேவனாரும் பின்பற்றவில்லை. அதனால்தான் சிந்துவெளி முத்திரைகளில் ஒன்றைக்கூட இவர்களால் செப்பமாகப் படிக்க முடியவில்லை.
மேற்கண்ட எழுத்துக்களை ஆய்ந்தோர் ஒரே எழுத்தொலிப்புக்குச் சமகாலத்தில் இடவேறுபாடுகளாக வழங்கிய வரிவடிவ வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டினர். எகுபதிய மொழியில் க(k) என்பதற்கு 16 வகை வரிவடிவ வேறுபாட்டு எழுத்துக்கள் உள்ளன. எகுபதிய மொழியிலுள்ள 24 அடிப்படை ஒலிப்பெழுத்துக்கு 130 வரிவடிவங்கள் உள்ளன. எந்தெந்த எழுத்துக்கு இடவேறு பாடாக எத்தனை வரிவடிங்கள் உள்ளன என அவர்கள் மேற்கண்ட மொழிகளில் பட்டியலிட்டனர். 38 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்துவெளி எழுத்தில் ஆய்வு செய்யும் ஐராவதம் மகாதேவனார். அசுகோ பர்போலா போன்றோர் இம்முயற்சியில் ஈடுபடவே இல்லை. வேறு யாரேனும் சிந்துவெளி எழுத்தில் இத்தகைய வேறுபாடுகளை (Homophonic) வகைப்படுத்திக் காட்டினாலும் அதை எடுத்துக் காட்ட வில்லை.
மேற்கண்டவாறு சுமேரிய எகுபதிய மொழிகளை ஆய்வு செய்தோர் குறிப்பிட்ட எழுத்தின் வடிவம் காலந்தோறும் எப்படி மாறி வந்திருக்கிறது என்று காலமுறை வரிவடிவத் திரிபுகளைப் (Chronilogical and regional Classification of the Script forms) பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர். இப்பணியையும் சிந்துவெளி எழுத்தாய்வில் எவரும் மேற்கொள்ளவில்லை. உலகம் ஒரு போக்கில் போனால் ஐராவதம் மகாதேவனார் போன்றோர் வேறொரு போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
சிறந்த ஆய்வாளர் என்றால் எந்தச் சிக்கலையம் விடுவித்துப் படிக்க முடியாத முத்திரை எழுத்துக்களையும் படித்துக்காட்டவேண்டும். அதை விடுத்து இதுவும் சரியில்லை அதுவும் சரியில்லை என்று கூறிவிட்டு அதற்கான அரைகுறைக் காரணங்களைக் காட்டுவதன் வாயிலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டதாகக் கருத முடியாது. ஒரு குற்றத்திற்கான வழக்கில் யார் குற்றவாளி என்னும் உண்மையைக் கண்டறியாமல் முறைமன்ற நடுவர் இரு சாராரிடத்திலும் குற்றம் உள்ளது என வழக்கைத் தள்ளுபடி செய்தால் அதைத் தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியாது.


நடுநிலை
சிந்துவெளி எழுத்தைப் படித்துக் காட்டும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியர்களின் அணுகுமுறைகளை அலசி இவை ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறும் ஐராவதம் மகாதேவனார் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படித்துக் காட்டிய அணுகு முறைகளைப் பற்றிக் குறை கூறாதது ஏன்?
சமற்கிருதம் பற்றிய அறிவு மேனாட்டாருக்கு மிகுதி, அசுகோ பர்போலா தமிழ் படிக்காதவர். எதையும் வடடொழி வழிவந்த தொன்மக் (புராண) கதைகளோடு இணைத்துக் காண்பார். சிந்துவெளி முத்திரைகளை வெளியிட்டவர்கள் வணிகர்கள். வணிகர்களுக்கும் தொன்மக் (புராண) கதைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது அசுகோ பார்போலாவுக்குத் தெரிவில்லை.
(தொடரும்)

திங்கள், 10 மே, 2010

பேரா. இரா.மதிவாணன் தொடர்ச்சி ...பகுதி-3

பேரா. இரா.மதிவாணன் தொடர்ச்சி ...பகுதி-௩

தமிழ்ச்சொல் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பதால் நான் சிந்துவெளி எழுத்தைப் படித்தமுறை சரியானதுதான் எனத் தெரிந்துகொண்டேன்.
தொல்காப்பிய இலக்கணக் கட்டமைப்புகள் சிந்துவெளி முத்திரைகளிலும் தென்படுவதோடு தமிழிக் கல்வெட்டுக்களிலும் ஒரு சீராக அமைந்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். நான் கூறிய தொல்காப்பிய மேற்கோள்களை அவர் நம்பவில்லை. ஆனால் அவருடைய முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் (Early Tamil Epigraphy) எனும் நூலில் தொல்காப்பிய இலக்கணக் கட்டமைப்புக்களைப் பொருத்திக் காட்டுகிறார்.
உடும்புப்பிடி
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அசோகரின் பிராமி எழுத்தை மட்டும் அறிந்திருந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் கி.பி. 1906 அளவில் பாளையங்கோட்டைக்கு அருகில் மருகால்தலை என்னுமிடத்தில் கண்ட பிராமி அல்லாத எழுத்துக்கள் கொண்ட தமிழிக் கல்வெட்டைக் கண்டு மருண்டனர். அதனைப் பாலி பிராகிருதம் போலவே படிக்க முயன்றனர். இவற்றை முதன்முதலில் பார்த்த எச்.கிருட்டின சாத்திரியாரும் கே.வி.சுப்ரமணிய அய்யரும் தென்னாட்டுக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் புலப்படுத்தினாலும் வடநாட்டுப் பிராமியின் திரிபாகவே கருதினர். இந்தக் கல்வெட்டு மூதாதைகளின் கொள்கைகளில் சொக்கிப் போன ஐராவதம் மகாதேவனார் தமிழிலுள்ள எழுத்துக்கள் வடக்கிலிருந்தே வந்தவை என்னும் மயக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை.
தென்னாட்டுத் தமிழிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த நாராயணராவ் இவை பிராகிருத மொழியைச் சார்ந்த பைசாச மொழிக் கல்வெட்டுக்கள் என்றார். பாண்டிய நாட்டுத் தமிழையும் பைசாச பிராகிருத மொழி என்று வடமொழியாளர் குறிப்பிடுவது வழக்கம். இவர் பிராகிருதபாலி மொழிச் சொற்களையும் சமற்கிருதமாகக் கருதினார்.

வடநாட்டுப் பிராகிருதம் மற்றும் சமற்கிருதத்தின் வளர்ச்சியால்தான் சமண முனிவர் காலத்தில் தமிழுக்கு எழுத்து தோன்றியது என்னும் தலைகீழ் நம்பிக்கையும் இவரை ஆட்கொண்டது. அதனால் இவர் தமிழ்ச் சொற்களை வடசொற்களாகக் காட்டியுள்ளார். பளித வாணிகர் நெடுமூலன் என மயிலை சீனி. வேங்கடசாமி தெளிவாகப் படித்துக் காட்டியுங் கூட பணித வாணிகன் நெடுமலன் என ஜராவதம் மகாதேவன் படித்துக் காட்டினார். பளிதம் என்பது வெற்றிலைப் பாக்குடன் சேர்த்துக் கொள்ளும் ஒருவகை கருப்பூரம், ஆனால் இதனை வெல்லப் பாகினைக் குறிக்கும் பணித எனும் சமற்கிருதச் சொல்லாகக் காட்டியுள்ளார். நெடுமல்லன் என்னும் சொல் நெடுமலன் எனக் குறுகியிருப்பதாகக் கூறுகிறார். வெல்லம் – வெலம் என்றும், கொல்லை – கொலை என்றும் திரிவது எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலை சீனி. வேங்கடசாமி, நடன காசிநாதன் போன்றோர் செப்பமாகப் படித்துக் காட்டிய சொல் வடிவங்களை இவர் எடுத்துக்காட்டவும் இல்லை. தன் பிழை பாடான சொல்லாட்சிகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் முன்வரவில்லை.
தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை எல்லாம் மூத்த தமிழறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.


பிராமிக் கல்வெட்டுப் பதிப்பு
சிந்துவெளி எழுத்துச் சான்றுகளை அடைவுபடுத்தி வெளியிட்டதோடு தன் சிந்துவெளி ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட பின்னர், ஒரே ஒரு முத்திரையைக்கூட இவர் நல்ல தமிழ்ச் சொல்லாகப் படித்துக் காட்டவில்லை. அடுத்ததாக இவர் மேற் கொண்ட பணி தென்னாட்டுப் பிராமியாகிய தமிழிக் கல்வெட்டுக்களை அடைவுப்படுத்தி Early Tamil Epigraphy என்னும் பெயரில் வெளியிட்டதாகும்.

இந்தத் தலைப்பே சிறிதும் பொருத்தமில்லாதது
1. தென்னிந்தியாவில் பல இடங்களில் சிந்துவெளி எழுத்துச் சான்றுகள் பாறை ஓவியங்களிலும், பானை ஓடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றை Early Tamil Epigraphy எனச் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து வடநாட்டுப் பிராமி எழுத்திலும் தமிழி (தென்னாட்டுப் பிராமி) எழுத்திலும் காணப்படும் சமண முனிவர்களின் கொடுங்கலப்பு கொச்சைத் தமிழ் இழி நடை வழக்குகள் மலிந்த குகைக் கல்வெட்டுக்களைத் தமிழ்க் கல்வெட்டு என்பது ஏற்கத்தக்கதன்று.
2. ஆதலால் இந்தக் கல்வெட்டு அடைவு நூலுக்கு Jain Tamil Dialect Epigraphy என்று பெயரிட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதல் புகுந்த முகமதியர் தமிழ்ச் சொற்களை ஒலிக்கத் தெரியாமல் நம்பள்கி சேலம் மேலே போறான். நிம்பள்கி திருச்சி மேலே எப்போ வர்ரான் எனப் பேசும் மொழியறியாதவர்களின் கடுங்கொச்சை வட்டாரச் சொல்லாட்சிகளில் தொல்காப்பிய இலக்கணத்தைப் பொருத்திப் பார்க்க முடியுமா?
3. மணிய் (மணி), பளிய் (பள்ளி), வழுத்தி (வழுதி), ஆந்தய் (ஆந்தை), மத்திரை (மதுரை), காவிதிஇய் (காவிதி), கொட்டுபிதோன் (குகையில் படுக்கை குடைவித்தவன்) போன்ற கொச்சைச் சொற்களைத் தமிழர்களால் பேசப்பட்ட தமிழ்ச் சொற்களாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தத் தமிழானாலும் இந்த அளவுக்குக் கொச்சையான கொடுஞ் சொற்களைப் பேசமுடியாது. மொழி அறியாதவர்களின் உளறல்களைத் தமிழ்க் கல்வெட்டு என்று பெயரிட்டு அழைப்பது பொருந்தாது.

வடதமிழ்
அசோகர் கல்வெட்டுகளில் உள்ள பிராமி எழுத்துக்களை இந்தியாவிலுள்ள முதன்மை எழுத்துக்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அசோகர் காலத்திற்கும் முற்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகள் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடநாட்டுப் பிராமி எழுத்துக்கள் வணிகர்களாலும், அரசர்களாலும் பயன்படுத்தப்பட்டவை. ஆனால் தென்னாட்டுத் தமிழி பொது மக்களால் ஆளப்பட்ட எழுத்து என்பது நிறுவப்பட்டுள்ளது. ஆதலால் வடநாட்டுப் பிராமியை விடத் தென்னாட்டுத் தென்பிராமி எனும் தமிழி காலத்தால் முற்பட்டது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்றவர் விளங்கிக் கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.
(தொடரும்)

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பேரா. இரா.மதிவாணன் தொடர்ச்சி ..

பகுதி -௨
பழந்தமிழரின் எண்களை வணிகர் வாயிலாக பொனீசியர் காலம் (கி.மு.1200) முதலாக மேற்காசிய வணிகர் அனைவரும் பின்பற்றினர். அதனால்தான் அரபி போன்ற மொழிகளில் 125 எனும் எண் 521 என வலமிருந்து இடமாக எழுதப்படாமல் நம்மைப் போன்றே 125 என எழுதப்படுகின்றன என்னும் உண்மையை ஐராவதம் மகாதேவன் போன்றோர் எண்ணிபார்க்க வேண்டும். மொழியளவில் வலமிருந்து எழுதுவோர் இடமிருந்து எழுதுவதாக மாற்றிக் கொண்ட வரலாறு உலகில் இல்லை. இது இந்தியாவில் மட்டும் நடந்ததா?
இந்திய எண்கள் என்னும் பழந்தமிழ் எண்கள் காலப்போக்கில் வரிவடிவத் திரிபுகளாகக் கிடைத்த போதிலும் இன்று உலகம் முழுவதும் ஆளப்படும் 1, 2, 3 போன்ற எண்கள் குறிப்பாகத் தமிழர் உலகத்திற்கு நல்கிய நாகரிகக் கொடையாக விளங்கி வருகின்றன.
எண்களை இடமிருந்து வலமாக எழுதிய பழந்தமிழ் மக்களும் சிந்துவெளி மக்களும் மொழியை மட்டும் வலமிருந்து எழுதியிருக்க முடியாது. சிந்துவெளி எழுத்துக்களின் எண்களே தமிழி (தென்பிராமி) கல்வெட்டுக்களில் எண்களாக ஆளப்பட்டிருப்பதால் சிந்துவெளி மொழி வலமிருந்து இடமாக எழுதப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
நம்பத் தகுந்த சான்றை நம்பாதது
சிந்துவெளி முத்திரை எழுத்துக்களைப் படிப்பதற்கு இருமொழி முத்திரை கிடைத்தால்தான் நம்பகமான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியும். எகுபது மொழியின் ஈரோகிளிபிக் எழுத்து படிப்பதற்கு மும்மொழி எழுத்துச் சான்று கிடைத்ததால் முத்திரை எழுத்துக்களுக்குரிய சரியான ஒலிப்பை சம்போலியன் என்பவர் உறுதிப்படுத்தினார். எகுபது, ஈரோகிளிபிக் எழுத்துச் சான்றுகள் முழுமையாகப் படிக்கப்பட்டன. அவ்வாறே சிந்துவெளி எழுத்துக்குத்தக்க சான்று கிடைக்கவில்லை என்று படிக்க முடியாததற்குக் காரணம் காட்டி வந்தனர்.

யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இந்திரபாலா ஆனைக்கோட்டை எனுமிடத்தில் கண்டெடுத்த வெண்கல முத்திரை ஈரெழுத்து முத்திரை என உறுதி செய்யப்பட்டது. அதில் மேலே மூன்றெழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களாகவும் கீழேயுள்ள மூன்றெழுத்துக்கள் தென்பிராமி எழுத்துக்களாகவும் இருந்தன. இது ஈரெழுத்துக்கள் தென்பிராமி எழுத்துக்களாகவும் இருந்தன. இது ஈரெழுத்துச் சிந்துவெளி எழுத்துச் சான்று என இந்திரபாலா கூறினார். இந்த இரு எழுத்து வடிவங்களில் தீவுகோ என்னும் சொல் எழுதப்பட்டிருப்பதை நானும் படித்துக் காட்டினேன்.
ஆயின் திசை திருப்பும் முயற்சியில் ஐராவதம் மகாதேவன் முற்பட்டுள்ளார். மேலே இருப்பது சிந்துவெளி எழுத்து போன்ற எழுத்து. இது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது எனத் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகிறார். இவர் எழுதும் ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலம் போன்ற எழுத்துக்கள் என்றும் இவர் பேசுகின்ற ஆங்கிலம், ஆங்கிலம் போன்ற ஆங்கிலம் என்றும் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்பத் தகுந்தவற்றை நம்ப மறுக்கிறார் என்பதற்கு மற்றொரு சான்றும் காட்டலாம்.
பீகார் மாநிலத்துப் பாகல்பூரில் துணை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு. வர்மா என்பவர், நான் சந்தால் பழங்குடி மக்களைக் காண விரும்பியதால் அழைத்துச் சென்றார். நான் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்பவன் என்பது அவருக்கும் தெரியும்.
சந்தால் பழங்குடி மக்களின் தலைவர் திசோம் நாய்கி விழா நாளில் அதுவும் முழுமதி நாளன்று வீட்டின் சுவரில் சிந்துவெளி எழுத்துக்களை எழுதுகின்றார். அவர் சிந்துவெளி எழுத்தில் எழுதிய ஒன்பது சொற்களைப் படம் பிடித்து அவற்றை என் நூலில் வெளியிட்டுள்ளேன். தம் முன்னோர்
எழுதிய எழுத்துக் குறியீடுகளைத் தாமும் எழுதுவதாக திசோம் நாயகி கூறினார். அவருக்கு அந்த எழுத்துக்களைப் படிக்கத் தெரியவில்லை. அந்த எழுத்துக் கோர்வை கொண்ட சொல்லாட்சிகள் அசுகோ பர்போலா வெளியிட்ட எந்தச் சிந்துவெளி எழுத்து அடங்கலிலும் இல்லை.
இவை அரப்பா மொகஞ்சதாரோவில் காணப்பெற்ற சிந்துவெளி எழுத்துக்கள் என்று நான் சொன்னபோது திசோம் நாய்கி அதை மறுத்தார். எங்களைத் தவிர இப்படி எழுதுபவர்கள் வேறொருவர் இருக்க முடியாது என்றார். சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை திசோம் நாய்கிக்கு எடுத்துச் சொல்லி அங்குள்ள எழுத்துக்களைப் படிக்கத் தெரிந்தவர் ஒருவர் சந்திக்க இருக்கிறார் எனத் திசோம் நாய்கி அவர்களுக்கு முன்னரே திரு. சர்மா சொல்லி வைத்திருந்ததால் என்னைச் சந்தால் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றித்தான் திரு. வர்மா அவர்களிடம் சொல்லியிருக்கிறார். இதைத் தலைகீழாகப் புரிந்து கொண்ட ஐராவதம் மகாதேவனார், திரு.வர்மா முன்கூட்டியே சிந்துவெளி எழுத்துக்களை திசோம் நாய்கிக்குச் சொல்லி வரைந்து காட்டிப் பிறகு என்னை அழைத்து என்னிடம் காட்டுவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என உண்மையைத் திரித்துக் கூறுகிறார்.
தன்னாலும் சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தெளிவாகப் படித்துக் காட்டுபவரையும் நம்பாத மனப்பாங்கு கொண்டவர்கள் இருப்பது இயல்பே. இதனை வருத்தம் தருவதாகக் கருதவியலாது.
இந்தியாவில் மட்பாண்டம் செய்வோர் குறியீடுகள் சலவைத் தொழிலாளிகள் போடும் அடையாளக் குறியீடுகள் அனைத்தும் சிந்துவெளி எழுத்தாகவே இருப்பதை என் களப்பணி ஆய்வுகள் வாயிலாகச் சுட்டிக் காட்டினேன். சிந்துவெளி எழுத்துக்கள் இந்தியா முழுவதும் தமிழர்கள் வழங்கும் இந்தியப் பொது எழுத்துக்களாக இருந்தன என்று கூறினேன். இது உண்மையா என்று ஆராய்வதற்காகக் களப்பணி முயற்சி மேற்கொள்ள ஐராவதம் மகாதேவனார் முன்வந்திருக்கலாம்.

சிந்துவெளி முத்திரையில் அவ்வன் என்னும் பெயரைப் படித்துக் காட்டினேன். புலிமான் கோம்பையில் உள்ள நடுகல்லில் தமிழி (தென்பிராமி)க் கல்வெட்டில் அவ்வன்பதவன் எனும் பெயரைப் பேராசிரியர் இராசன் படித்துக் காட்டியிருக்கிறார். நான் சிந்துவெளி முத்திரைகளில் படித்த அவ்வன் தமிழ்ச்சொல் தமிழ் நாட்டிலும்
-தொடரும்…

சனி, 24 ஏப்ரல், 2010

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!
பேராசிரியர் இரா. மதிவாணன்
சிந்துவெளி முத்திரைகள் முதலாக, பிரகிருதக் கல்வெட்டுக்கள், வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் வரை உலகறிந்த ஆராய்ச்சியாளராக விளங்குபவர் ஐராவதம் மகாதேவன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. மாவட்ட ஆட்சியாளராகத் தொடங்கிய அவருடைய பணி கல்வெட்டு ஆராய்ச்சியை வாழ்விலக்காகக் கொண்டது; உலகளாவிய புகழ் கொண்டது.
சிந்துவெளி முத்திரைகளிலும் எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படும் சொல்லடைவுகளை முறைப்படுத்தி வெளியிட்டதும் தென்னகப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்து முந்தைய தமிழ்க் கல்வெட்டுக்களை வெளியிட்டதும், இவருடைய முதன்மையான வெளியீடுகள், எண்ணிறந்த ஆங்கிலக் கட்டுரைகள் உலகப் புகழ் தந்தன. தமிழில் இவர் எதுவும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஆய்வுகள் தமிழுக்கு வெறும் ஊக்கம் தந்தன. ஆக்கம் எதுவும் தரவில்லை. மாறாகத் தமிழ் வரலாற்றைத் தாக்குவனவாகவும் உள்ளன என்பது வெளிப்படை.
சிந்துவெளி எழுத்தாய்வுகள்
பின்லாந்து எல்சின்கி பல்கலைக்கழகத்துச் சிந்துவெளி ஆய்வாளர் அசுகோ பர்போலாவொடு இணைந்து இவர் எடுத்த முடிவுகளின் வண்ணம் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்க்குரியது1 என்பது பாராட்டத்தக்கது. ஆனால் சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கிறது என இவர்கள் எடுத்த முடிவு2 முற்றிலும் தவறானது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்துவெளி எழுத்து படிக்கப்படாததற்கு இந்தத் தவறான முடிவே காரணமாயிற்று. உடும்புப் பிடியாக இவர்கள் கொண்ட கோட்பாடு எத்தனை நூற்றாண்டாயினும் வெற்றிபெறப் போவதில்லை. ஒருசில முத்திரைகளை யேனும் படித்துக் காட்டியவர்களால்தான் எழுதப்பட்ட முறை வலமா! இடமா! என்பதை முடிவுகட்ட முடியும். ஒரு முத்திரையைக் கூட இவர்கள் ஒழுங்காகப் படித்துக் காட்டாமல் எழுதப்பட்ட திசை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக உள்ளது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

பி.பி.இலால் என்னும் ஆய்வாளர் பானை ஓட்டிலுள்ள எழுத்தின் வீழ்கோடுகளைச் சில வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகப் படிந்துள்ளன எனக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு இவரும் இம்முடிவுக்கு வந்துள்ளார். இடதுகைப் பழக்கமுள்ளவன் கூட அப்படிக் கோடுகள் வரைந்திருக்க முடியும். இதனை ஒரு ஆணித்தரமான காரணமாகக் கொள்ள முடியாது. இது முதற்காரணமாக, சிந்துவெளி முத்திரைகளில் பெரிய எழுத்தாக எழுதத் தொடங்கி வரி இறுதியில் எழுத்து சிறுத்துப் போகிறது. எஞ்சிய எழுத்துக்களை வலப்பக்கத்து இறுதியில் கீழே எழுதியுள்ளனர். வலமிருந்து இடமாக எழுதியதால்தான் எஞ்சிய எழுத்தை வலப்பக்கத்து இறுதியில் எழுதியுள்ளனர் என்பதை இரண்டாம் காரணமாகக் காட்டியுள்ளனர். எழுத்துக்களை முத்திரைக் கல்லில் பொறிப்பவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு நிரம்பாத தொழிலாளர்களாக இருப்பது இயல்பு. ஆதலால் எஞ்சிய எழுத்தை எங்கே பொறித்துள்ளனர் என்பதைக் காரணமாகக் காட்ட முடியாது.
வட்டமாகப் பொறித்த முத்திரைகளில் சிறிய முத்திரை எழுத்துக்களில் தொடங்கிப் பெரிய எழுத்துக்களில் முடிந்த பாங்கு வல இடமாக உள்ளது என்னும் மூன்றாம் காரணமும் ஏற்கத் தக்கதன்று. பெரும்பாலான முத்திரைகளில் எழுத்துக்கள் சம உயரமுடையனவாக உள்ளன. எழுத்து பெருத்தும் சிறுத்தும் போவது எழுதுபவரின் கைப்பாங்கு. ஆதலால் இந்தக் காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.
ஆணித்தரமான சான்று
சிந்துவெளி முத்திரை எழுத்து இடமிருந்து வலமாக எழுதப்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 5000 எழுத்துச் சான்றுகளைத் தமிழாகப் படித்துக் காட்டியுள்ளேன்,3 ஒரு மொழியில் எழுத்துக்களைத் திசை மாற்றி எவராலும் படிக்க முடியாது. சிந்துவெளி எண்களும் 115, 183, 2400 போன்று இடமிருந்து எண்மானமாக எழுதப் பெற்றுள்ளன. பெரிய எண்ணை முதலில் சொல்லி அடுத்த எண்ணை வரிசைப்படுத்திச் சிந்துவெளி நாகரிகக் காலத்திய இடமிருந்து வலமாக எழுதும் எண்ணுமுறை தமிழ்க் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு வாயிலாக நான் நிறுவியுள்ளேன். மயிலை சீனி. வேங்கடசாமியும் இவை எண் குறித்த குறியீடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
௫ அராபிய எண்கள் எனக் கருதப்பட்ட இன்றைய எண்கள் இந்திய எண்களே என அராபிய ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய எண்கள் எனக் குறிக்கப் பட்டுள்ள சிந்துவெளி நாகரிகக் காலத்திய வரிவடிவங்கள் திரிபுற்ற தமிழ் எண்களே என நான் நிறுவிக் காட்டியுள்ளேன்.
அரபி, உருது, பாரசீக மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும் வடசெமித்திக் எழுத்து மரபைச் சார்ந்தவை. இம்மொழியில் எண்களுக்குரிய குறியீடுகளை முறைப்படி அவர்கள் வலமிருந்து இடமாகத்தான் எழுத வேண்டும். ஆனால் எல்லோரும் வியக்கும் வகையில் எண்களை மட்டும் இந்திய மொழிகளைப் போல் இடமிருந்து வலமாக எழுதுகின்றனர். இதன் காரணம் என்ன?­­­­
.....தொடரும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

குட்டி ரேவதி அவர்களுக்கு

கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு,
வணக்கம். முத்துக்குமார் எழுதுவது.
இன்றுதான் உங்கள் வலைதளத்தைக் கண்டேன். http://www.kuttyrevathy.blogspot.com/
ஒரு நிகழ்வில் ஏற்ப்படும் உணர்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இனி தொடர்ந்து உங்கள் வலைதளத்தைப் படிக்கிறேன்..
எழுதுகிறேன்.. கவிஞர் தமிழ் நதியின் உங்களுடனான நேர்காணல் வாசித்தேன்.
என்றும் அன்புடன்,
கு.முத்துக்குமார்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இறப்பு -வாழ்க்கையின் உண்மை

இறப்பு -வாழ்க்கையின் உண்மை

எதிர்பாரா விருந்தாளி

உனக்கு பிடித்தவர்களை அழைத்துக்கொள்கிறாய்

உன்னைவிட எங்களுக்குப் பிடித்தவர்களை

எங்களைக் கேட்காமலே அழைத்துக்கொள்கிறாய்..

எவ்வளவு சுயநலக் காரன் நீ ...

நாங்கள் விரும்புகிறவர்களையே நீயும் விரும்புவது ஏனோ?

நாங்கள் உன்னைத்தான் வாழ்வின் உண்மை என்று நம்புகிறோம்.

வலியும் வேதனையும் புரியுமா உனக்கு ?

இருப்பினும் எங்களால் உன்னை தோற்கடிக்க முடியாது..

சனி, 9 ஜனவரி, 2010

பெறுனர்
பேராசிரியர் செல்வ கனகநாயகம்
இயக்குனர்
தெற்காசியவியல் ஆய்வு மையம்
டொராண்டோ பல்கலைக்கழகம்
கனடா
மதிப்பிற்குரிய அய்யா ,
வணக்கம். கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கிய தோட்டமும் டொராண்டோ பல்கலைக்கழக தெற்காசியவியல் ஆய்வு மையமும் இணைந்து ௨௦௦௯ ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இலக்கிய விருதான இயல் விருதை வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத தெரிவித்து கொள்கிறேன் .
உடல்நலக்குறைவு காரணமாக கனடாவிற்கு நேரில் வந்து இயல் விருதை பெற்றுக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். தங்கள் மடலில் குறிப்பிட்டது போல சென்னையில் தங்களிடம் பெற்றுக்கொள்வேன். தங்கள் மடலில் கேட்டுக்கொண்டபடி தமிழ் இலக்கிய ஆய்விற்கு எனது பங்களிப்பைத் தொகுத்து விழாவின்போது வழங்க விரும்புகிறேன். தாங்கள் விரும்பினால் ஏன் ஆய்வுத் தொகுப்பின் ஒரு படியைத் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

மதிப்பிற்குரிய திரு ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் இயல் விருது வழங்குவது பற்றி ஏன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் ஆய்வு நிறுவனத்திற்கு எனது சில ஆய்வு நூல்களை கூடிய விரைவில் வான் அஞ்சலில் அனுப்புவேன்.
விருதை முடிவு செய்த நடுவர் குழுவினருக்கும் விருது வழங்கும் அமைப்பிற்கும் என் குடும்பத்தின் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள்
ஞானி ( கி. பழனிச்சாமி )
24,வி. ஆர். வி. நகர்,
ஞானாம்பிகை ஆலை அஞ்சல்
கோயம்புத்தூர் -641029
தமிழ் நாடு
தொலைபேசி :